நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்… தமிழக ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள்..!
தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தலைமையில் இன்று( ஜூன் 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலில் தமிழ்த் தாய்
வாழ்த்தும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.
ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது.
* மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் செலுத்தும் வரியிலிருந்து, தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வினைப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
* மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினை பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்துக்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழகத்திற்கான மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும்.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
* வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை இந்த அரசு மூடியுள்ளது. போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
* மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுக்காப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும். தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* கனிமவளத்துறையில் நடக்கும் ஊழல் மூலம், அந்த துறையின் வருவாய் குறைந்துள்ளது. இயற்கை வளக் கொள்ளையை தடுத்து அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Comments are closed.