சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன்.17) சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று (ஜூன்.16) அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்தித்த வைகோ, அதனைத் தொடர்ந்து இன்று முதலமைச்சருடன் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக்கழக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் விரிவாக பேசியதாகவும் கூறினார். “ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. எண்ணற்ற மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்து இறுதியில் ஆலையை மூட வைத்தோம். தற்போது வேறு வடிவத்தில் ஸ்டெர்லைட் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் கிடைக்கிறது. எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்” என்றார். அத்துடன், தனது நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவுள்ள நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்ததாகவும் வைகோ தெரிவித்தார். மேலும் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது”, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோமா? தவெகவுடன் இணைவோமா? என பொதுக்குழுவில் தெரியும் என்று கூறினார்.

Comments are closed.