1990-களில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தவர் கௌதமி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். இவர், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004-ம் ஆண்டு கவுதமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார். அதன்படி, 2004-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம், நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை கௌதமி பெயரிலும் தனது மனைவி நாச்சியாள் பெயரிலும் பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில், அழகப்பன், நாச்சியாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின் சொத்துகள் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித்தனியாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கவுதமி கொடுத்த புகாரின்பேரில் சென்னை, மதுரையில் அழகப்பனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Comments are closed.