மின் வசதி இல்லாததால் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்…* நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு..!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 15) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினர்.
அதேபோல, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம், ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஸ்டாலின் நகர் பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கூலித் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் எங்கள் பகுதியில், பெரும்பாலான வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை தங்களுக்கு மின் இணைப்போ அல்லது குடியிருக்கும் இடத்திற்கான பட்டாவோ வழங்கப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு, பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments are closed.