திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிப்காட் சுற்றுப்பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிப்காட் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயது பெண் சிறுமி கொலை செய்யப்பட்டு முட்புதரில் கிடந்தார்.
அந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என காவல்துறை தெரிவித்துள்ளது.


Comments are closed.