மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த அவர், இன்று(12-06-2026) கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்திற்குட்பட்ட கொல்லூரியில் பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன கோயிலுக்கு சென்றார். மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற முதல்வர் விஜய், மூகாம்பிகையை மனமுருகி வேண்டினார். அத்துடன், 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை அம்மனுக்கு காணிக்கையாக அளித்தார். மூகாம்பிகை அம்மனுக்கு அன்றாடம் செய்யப்படும் பூஜையில் இந்த வாளை வைத்து வழிபாடு நடத்தும்படி அவர் வேண்டுகோள் விடுத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர்களாக இருந்த நிலையில், அவர்களின் வழியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மூகாம்பிகையை தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.