Rock Fort Times
Online News

திமுக விட்டதை த.வெ.க. அரசு கையில் எடுத்தது: வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.மீது லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணை…!

அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். இதன் காரணமாக ஜெயலலிதா நியமித்த நால்வர் அணியில் ஒருவராக இடம் பிடித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சிறிது காலம் அதிமுகவில் நீடித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியை திமுக வழங்கியது. அதில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இவர் ,அதிமுக அமைச்சரவையில் இருந்த போது ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து இந்த தொகையை அவர் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி திமுக ஆட்சியில் வைத்திலிங்கம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் திமுகவில் அவர் இணைந்ததால் இந்த லஞ்ச புகார் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைத்திலிங்கம் மீதான வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் முடித்துக் கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வரவேண்டுமென, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில்,
ரத்து செய்யப்பட்ட வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கை மீண்டும் விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான தகவலை விரைவில் நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவிக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்