Rock Fort Times
Online News

ஸ்ரீவைகுண்டம் பெண்ணுக்கு நடந்த அநீதி: “யார் அந்த மேலிடம்”- உதயநிதி கேள்வி!

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் பகுதியில், தவெக இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தவெக நிர்வாகி ஒருவர் தனது நண்பருடன் வேலை வாங்கித்தருவதாக இளம்பெண்ணை காரில் சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அந்தப்பெண்ணும் அவரின் பேச்சை நம்பி காரில் சென்றுள்ளார். ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ளதனியார் விடுதியில் அந்தப்பெண்ணை தங்க வைத்துள்ளனர். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் ஒருவரிடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது, பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்