தைரியம் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் சீட் ஜெயித்து காட்டுங்கள்…* உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சவால்!
சென்னை, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு தவெக பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. இதில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா திமுகவை சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “திமுக தன்னுடைய தோல்வியை என்றைக்கும் நினைக்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் நம்மை குறைவாக நினைப்பார்கள். கிண்டல், கேலி செய்வார்கள். இப்போது கூட உள்ளாட்சித்துறையில் ஜெயித்த திமுக மேயர், நகராட்சி தலைவர்கள், நம்முடைய தவெக எம்.எல்.ஏ.,க்களுக்கு சப்போர்ட் செய்வதே கிடையாது. தண்ணீர் விடாமல், குப்பைகளை அள்ளாமல் வேண்டுமென்றே இந்த தவெக அரசுக்கு கெட்டப்பெயர் கிடைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள்.
மின்தடை பிரச்சனை இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் செய்வது திமுகவில் இருக்கும் மேயர்கள் தான். அதோட வெளிப்பாடு தான் 108 தொகுதிகளில் நாம் ஜெயித்தோம். அதில் ஒரு வெற்றி என்னை கண்கலங்க வைத்தது. அது திருவிக நகரில் ஜெயித்த பல்லவி தான். வேட்பாளராக தேர்வு செய்யும்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஒரு நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ., பல்லவியை அவமரியாதை செய்தார். மேயர் என்ற அகங்காரத்தை பிரியாவுக்கு கொடுத்தது திமுக தான். உதயநிதிக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கப்போகிறது. தைரியம், தில்லு இருந்தால் 25 மேயரில் ஒரு மேயரை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம். இதே சென்னையில் நீங்கள் டெபாசிட் வாங்குவீர்களா என பார்க்கலாம். பல்லவி எங்கு அவமானப்படுத்தப்பட்டார்களோ அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை தொடங்கி விட்டோம். ஒரு மேயர் பதவியை வென்று காட்டுங்கள். அப்போது திமுக என்றால் அசைக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.