Rock Fort Times
Online News

அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவதில் சென்னை மேயர் பிரியா-தவெக எம்.எல்.ஏ பல்லவி நேருக்கு நேர் மோதல்…!

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுவரை மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக குத்துவிளக்கு ஏற்றுவதற்காக முக்கிய பிரமுகர்கள் மேடையில் ஒன்று கூடியிருந்தனர். அப்போது, மேயர் பிரியா கையில் மெழுகுவர்த்தி வைத்திருந்ததாகவும், அருகில் நின்றிருந்த திரு.வி.க. நகர் தொகுதி தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ பல்லவி விளக்கேற்றுவதற்காக மெழுகுவர்த்தியைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பல்லவியிடம் மெழுகுவர்த்தியை வழங்காமல், அங்கிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் மேயர் வழங்கியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ பல்லவி, நிகழ்ச்சியை பாதியிலேயே புறக்கணித்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள மற்றொரு தொடக்கப் பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. முந்தைய சம்பவத்தால் ஏற்பட்ட சர்ச்சையை தவிர்க்கும் வகையில், இந்த முறை மேயர் பிரியா தாமாகவே முன்வந்து எம்.எல்.ஏ பல்லவியை விளக்கேற்ற அழைத்து மெழுகுவர்த்தியை நீட்டினார். ஆனால், முன்னதாக ஏற்பட்ட அவமதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேயர் நீட்டிய மெழுகுவர்த்தியை வாங்க எம்.எல்.ஏ பல்லவி மறுத்து விட்டார். இதனால் விழாவிற்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட திரு.வி.க நகர் தொகுதியை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி பெற்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்