நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று (ஜூன் 3) தமிழகத்தின் 34வது டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கடந்து வந்த பாதை,
1994-ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பியாக இருந்தவர். சென்னை, பூக்கடை துணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையராகவும் பொறுப்பு வகித்தவர். 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பணியாற்றினார். தொடர்ந்து, தமிழகத்தில் சிபிசிஐடி ஐஜி-யாக பதவி வகித்தார். மதுரை காவல் ஆணையராகவும் பதவியில் இருந்திருக்கிறார். பின்னர் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக பணியாற்றினார். அதன் பின்னர், செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக பதவி வகித்தார். அதன் பிறகு, அயல்பணியாக டெல்லி சென்ற அவர், தற்போது தமிழக டிஜிபியாக பொறுப்பேற்று இருக்கிறார்.

Comments are closed.