ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து, தனது துணிச்சலான பேச்சுக்களால் இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமடைந்தார். கட்சிப் பணிகளில் ஆக்டிவாக இருந்ததால் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார் அண்ணாமலை. இதன் பலனாக, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக 11 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. இதனால், அண்ணாமலையின் செல்வாக்கு உயர்ந்தது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக அதிமுகவின், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நிர்பந்தத்தினால், அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்றி, நயினார் நாகேந்திரனை நியமித்தது பாஜக தலைமை. மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த அண்ணாமலைக்கு அதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இருந்தாலும் கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இருந்தாலும் 27 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், கட்சி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லி சென்ற அவர் இன்று( ஜூன் 2) பாஜக தேசிய தலைவர் நிதின் நபினையும், மூத்த தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து, தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அதற்கான ஐந்து பக்கம் கொண்ட கடிதத்தையும் வழங்கியதாக கூறப்படுகிறது. அண்ணாலை தனிக்கட்சி தொடங்கினால், எதிர்கால அரசியல் போட்டி விஜய், அண்ணாமலையை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மறுபுறம் அண்ணாமலையை இழப்பது தமிழக பாஜகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தேசிய தலைமை கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவருக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி வழங்குவது, மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பது அல்லது மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்குவது போன்ற பல்வேறு ஆஃபர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை இறுதியாக எந்த முடிவை எடுக்கப் போகிறார் என்பது தான் தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. இதற்கிடையே பாஜக தலைவர் நயினார நாகேந்திரனை உடனடியாக டெல்லி புறப்பட்டு வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதுவும் அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Comments are closed.