தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நைனார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதாக அந்த சமயத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இருந்தாலும் பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இந்த சூழலில், அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க போவதாக கடந்த 4 நாட்களாக பேச்சுகள் அடிபட்டு வந்தன. மேலும், அண்ணாமலையை மையப்படுத்தி பல மாவட்டங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.
இந்நிலையில் டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் இன்று(02-06-2026) பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் அண்ணாமலை சந்தித்து பேசினார். மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷையும் சந்தித்துள்ளார். அப்போது அவர், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.