திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (31).டிரைவர். இவரது மனைவி கவிதா (25). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கவிதாவின் தந்தை முருகேசன் (50). இவரது மனைவி சித்ரா. இவர்களது மகன் கார்த்திக், மகள் நர்மதா (28). இக்குடும்பத்தினர் பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தில் வசித்து வந்தனர். முருகேசனின் மகன் கார்த்திக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், அதற்கான பரிகார பூஜை செய்வதற்காக முருகேசன் தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கத்தில் உள்ள மருமகன் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று அதிகாலை பாலசுப்பிரமணியன் தனது காரில் குடும்பத்தினர் அனைவரையும் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிகார பூஜைகளை முடித்து விட்டு, மாமனார் குடும்பத்தினரை மீண்டும் வெள்ளனூர் கிராமத்தில் விடுவதற்காக முசிறி – துறையூர் சாலை வழியாக பாலசுப்பிரமணியன் காரை ஓட்டி வந்துள்ளார். கார் முசிறி – துறையூர் சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது காஞ்சிபுரத்திலிருந்து கரூர் மாவட்டம், புலியூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பாதுகாப்பு காலணிகளை ஏற்றி வந்த லாரியுடன் எதிர்பாராதவிதமாக கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்கல், சுக்கலாக நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த மருமகன் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மைத்துனர் கார்த்திக் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெம்புநாதபுரம் போலீசார், பொதுமக்களின் உதவியோடு ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து, காரின் இடிபாடுகளை அகற்றி காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவிதா, சித்ரா, நர்மதா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோரை மீட்டனர். படுகாயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பாலசுப்ரமணியனின் மனைவி கவிதா மற்றும் மாமனார் முருகேசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள், மகன், மருமகன் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த லாரி டிரைவர் ஞானசூரியன் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.