கேரளா மாநிலம், மலப்புரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாரி நிறைய வெடி மருந்துகள் சிக்கின. அந்த லாரியில் இருந்த வெடி மருந்துகளை கைப்பற்றி கொச்சினை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவை தமிழகத்தில் திருச்சி, விருதுநகர், கர்நாடக மாநிலத்தில் மிசாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள 3 வெடி மருந்து நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட வெடி மருந்துகள் என்பதை கண்டறியப்பட்டது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முருங்கப்பட்டியில் செயல்பட்டு வரும் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ் எனப்படும் தொழிற்சாலையில் கல்குவாரிகள் மற்றும் கிணறுகள் தோண்ட பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைக்கு கொச்சினை சேர்ந்த 5 என்ஐஏ அதிகாரிகள் இன்று (30-05-2026) வருகை தந்தனர். தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் வெடி மருந்துகள் தயாரிப்பு, விநியோகம் குறித்த பதிவேடுகளை தொடர்ந்து ஆய்வு செய்தனர். இவர்களின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு சிறப்பு அதிரடி காவல் படையினர் ஒரு பேருந்தில் வந்திருந்தனர். தொழிற்சாலையை சுற்றி அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 2016-ம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.