மொட்டை மாடியில் நீச்சல் குளத்துடன் திருச்சியில் புதிதாக அமைய உள்ள 3 இன்டர்நேஷனல் ஸ்டார் ஹோட்டல்கள்…!
சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் திருச்சி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. திருச்சியில் சர்வதேச விமான நிலையம், 7- க்கும் மேற்பட்ட நடை மேடைகளை கொண்ட விசாலமான ரயில் நிலையம், மூன்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இதனால், திருச்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல பன்னாட்டு நிறுவனங்களின் ஐ.டி.கம்பெனிகளும் உள்ளன. மேலும் பல ஐடி கம்பெனிகளும் வர உள்ளன. இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. திருச்சியில் ஐடி பார்க், மால், வணிக வளாகங்கள் அதிகரித்து வரும் நிலையில்
தற்போது ஆடம்பர ஹோட்டல்களும் வர துவங்கியுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற மூன்று பன்னாட்டு பிராண்டட் ஹோட்டல் குழுமங்கள் ( International Branded Hotel Chains ) தங்களின் பிரம்மாண்டமான ஹோட்டல்களைத் திருச்சியில் தற்பொழுது வேகமாகக் கட்டி வருகின்றன.
முதலாவதாக, இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஐஹெச்சிஎல் குரூப் ( IHCL Group – Taj Hotels ), திருச்சி திருவானைக்காவல் பைபாஸ் பகுதியில் தனது புதிய சொகுசு ஹோட்டலை அமைத்து வருகிறது. இந்த ஹோட்டல் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 11 அடுக்கு மாடிகளுடன் ( B+G+11 Floors ) கட்டப்பட்டு வருகிறது. அதன் மொட்டை மாடியில் நீச்சல் குளம் மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவதாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்’ ( Four Points by Sheraton )ஹோட்டல் குழுமம், திருச்சி ரயில் நிலைய சந்திப்பிற்கு நேர் எதிரே தனது மெகா ஹோட்டல் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது. இந்த ஹோட்டல் அடித்தளம், தரைத்தளம், மெஸ்ஸானைன் தளம் மற்றும் 8 அடுக்கு மாடிகளுடன் (B+G+M+8 Floors) கட்டப்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலின் மொட்டை மாடியிலும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.
மூன்றாவதாக, இந்தியாவின் மற்றுமொரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான ஐடிசி-யின் ‘ஐடிசி ஃபார்ச்சூன்’ ( ITC Fortune ) ஹோட்டல் குழுமம், திருச்சியின் முக்கியப் பகுதியான டிவிஎஸ் டோல்கேட் சந்திப்பில் தனது புதிய ஹோட்டலை நிறுவி வருகிறது. இது இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 அடுக்கு மாடிகளுடன் ( 2B+G+7 Floors ) கட்டப்பட்டு வருகிறது. இதன் மொட்டை மாடியிலும் கூரை வடிவில் நீச்சல் குள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
திருச்சியில் ஒரே நேரத்தில் இத்தனை முன்னணி பிராண்டட் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுமானத்தில் இருப்பது திருச்சி மாநகரம் அடைந்து வரும் பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சியைப் காட்டுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக பன்னாட்டுத் தொழிலதிபர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கார்ப்பரேட் வல்லுநர்களை ஈர்ப்பதில் திருச்சியும், கோவையும் முன்னணியில் உள்ளது. இந்த சர்வதேச ஹோட்டல்களின் வருகையால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட 2ம் மற்றும் 3ம் கட்ட நகரங்களும் பலவகையில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.