பிரபல நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று(மே 30) காலமானார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணிக்கு (85) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று(30-05-2026) காலை 6 மணி அளவில் உயிரிழந்தார். துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித்குமார் சென்றிருக்கக் கூடிய நிலையில், அவரது தாயார் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக அவர் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வர உள்ளார். அஜித்தின் தாயாருடைய இறுதிச்சடங்குகள் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்,
அஜித்குமார் தாயார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அன்புச் சகோதரர் அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.