Rock Fort Times
Online News

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிட்டார். இதில், இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இந்திய அரசமைப்பு சட்டப்படி இரு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்றைய தினம் (மே 25) அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய 3 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கினர். சபாநாயகரும் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக திருச்சி கிழக்கு, தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தற்போது ராஜினாமா செய்தவர்களே த.வெ.க.சார்பில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், லால்குடி தொகுதியில் த.வெ.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கு.ப.கிருஷ்ணன் பெயர்கள் அடிபட்டன. ஆனால்,
கு.ப. கிருஷ்ணனுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது. ஆகவே, சகாயம் ஐஏஎஸ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்த, நிர்வாகத் திறமை வாய்ந்த, எவ்வித அரசியல் கறையும் இல்லாத ஒரு படித்த ஆளுமையை நிறுத்த முதல்வர் விஜய் விரும்புவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் ஆலோசனைக் குழுவிலும் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இவரை நிறுத்தினால், எதிர்க்கட்சிகளின் பலத்த வியூகங்களையும் எளிதில் முறியடிக்கலாம் என தவெக தலைமை கணக்குப் போடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்