Rock Fort Times
Online News

எபோலா வைரஸ் தாக்கம் எதிரொலி; திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்…!

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவின்படி, அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்று போக்கு, காரணமில்லாத ரத்த போக்கு, தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் இருப்பவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிகுறிகளுடன் யாரும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனரா? என கண்டறிந்து பாதிப்பு இருந்தால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் சமயத்தில் தனிமைப்படுத்தல் வார்டாக செயல்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழு தயார் நிலையில் உள்ளனர். 24 மணி நேர கண்காணிப்பு வார்டாக செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்