யார் மனமும் புண்படும்படி கடுஞ்சொற்களால் பேச வேண்டாம்”…* கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை..!
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக, அமைச்சரவையில் பங்கு பெற அந்த கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. காங்கிரஸ், ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில், தவெக அமைச்சரவையில் பங்கு பெறுவதாக ஐயூஎம்எல் கட்சியும், விசிகவும் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று (22-05-2026) காலை 9:30 மணியளவில் ஐயூஎம்எல் எம்.எல்.ஏ ஏ.எம்.ஷாஜகான் மற்றும் விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் தவெக அமைச்சரவையில் 31 தவெக அமைச்சர்கள், 2 காங்கிரஸ் அமைச்சர்கள், 1 ஐயூஎம்எல் அமைச்சர், 1 விசிக அமைச்சர் என மொத்தம் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையில், திமுக கூட்டணியில் அங்கம் பெற்ற ஐயூஎம்எல், விசிக ஆகிய கட்சிகள், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் வார்த்தை போர் தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஐயூஎம்எல், விசிக ஆகிய கட்சிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசிகவினரும் திமுகவை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். பதிலுக்கு திமுகவினரும் விசிகவை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடுஞ்சொற்களை பயன்படுத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசுக்கும், ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே, கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.