Rock Fort Times
Online News

‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ நனவானது விசிகவின் கனவு…!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று(மே 21) தமிழக வெற்றிக்கழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். இவர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றது. இந்தநிலையில் இன்று (மே 22) விசிக வை சேர்ந்த வன்னி அரசு, ஐயூஎம்எல்
ஷாஜகான் ஆகிய இருவர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், திமுக தலைமையோ இதனை ஏற்க மறுத்து விட்டது. இருந்தாலும் காங்கிரஸ், வி.சி.க.உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்தன. ஆனால், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இருந்தாலும் அவருடன் யாரும் கூட்டணி வைக்க முன் வரவில்லை. தற்போது விஜய் அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விஜய் சொல்லியபடியே அவர்களுக்கு அமைச்சரையில் இடம் வழங்கியுள்ளார். இதன்மூலம், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற கனவு நனவாகி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்