Rock Fort Times
Online News

டெண்டர் முறைகேடு புகார்: மின்வாரிய உயரதிகாரிகள் 2 பேர் ‘சஸ்பெண்ட்’…!

கடந்த காலங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் சிண்டிகேட் அமைக்கப்பட்டு அதன்மூலம் தேர்வானவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில், டிரான்ஸ்பார்மர் ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு அதிக தொகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் மின்சார வாரிய ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. புதிய அரசில் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, முறைகேடாக அனுமதிக்கப்பட்டதாக புகாருக்கு உள்ளான டெண்டர்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று( மே 21) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும், முறையற்ற நிர்வாக தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் காரணமாக தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) வி.காசி, தலைமைப் பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) பி.சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பசுமை எரிசக்தி கழகத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) எஸ்.மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரணை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்