Rock Fort Times
Online News

தற்போதைய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவா..?- அரசிதழிலும் தப்பும், தவறுமாக தகவல் வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வெற்றி வாகை சூடினார். அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதியை தற்போது முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சி சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த தொகுதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஆகவே, இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் பெயர் அப்பாவு என இடம்பெற்று இருக்கிறது. இவர், கடந்த திமுக ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் ஆவார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தற்போது ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் ஆக உள்ளார். சபாநாயகர் யார் என்று கூட தெரியாமல் சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம், சட்டமன்றத்தின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் உச்சகட்ட அமைப்பாகும். சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களுக்குள்தான் பதவி ஏற்று உள்ளார். இது கூட தெரியாமல் சட்டப்பேரவை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தவறு இழைத்து உள்ளனர். இதைவிட அவர்களுக்கு வேறு என்ன ரோடு போடும் வேலை இருக்கிறதா ? குளத்தை வெட்டி தூர்வாரும் வேலை இருக்கிறதா? ஆஸ்பத்திரிகளை கண்காணிக்கும் வேலை இருக்கிறதா? சட்டமன்ற நடவடிக்கைகளை கூட கண்காணிக்க தெரியாமல் இப்படி சபாநாயகர் பெயரையே மாற்றி அதுவும் அரசிதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு. எவ்வளவு கவனக்குறைவாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. உண்மையிலேயே இது கவனக்குறைவாக ஏற்பட்டதா? அல்லது முதல்வர் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டனரா? என்று தெரியவில்லை. இந்நேரம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். ஆகவே இந்த தவறை செய்த சட்ட சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்