Rock Fort Times
Online News

மக்களை மட்டுமல்ல… எதிர்க்கட்சித் தலைவர்களின் மனங்களையும் வென்ற முதல்வர் விஜய்…!

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இன்று(மே 11) தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். அதற்கான நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் விஜய், நேராக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது அவரை மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கட்டித்தழுவி வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் அங்கிருந்து அவர், நேராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்துக்கு சென்று அவரது ஆசியையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி இல்லத்திற்கு சென்று அவரது வாழ்த்துக்களையும் பெற்றார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்றார். தங்கள் வீட்டிற்கு வருகை தந்த விஜய்யை, வாசலில் காத்திருந்து ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்த சீமான், அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதோடு விஜய்யும் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் கலந்து பேசினர். இதையடுத்து. முதல் அமைச்சர் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் மற்றும் அவரது கட்சியினரை தற்குறி கூட்டம் என்றும், விசில் அடிக்கும் கூட்டம் என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மூத்த அரசியல் கட்சி தலைவர்களை அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்றது சிறந்த அரசியல் பண்பாடாக பார்க்கப்படுகிறது. மக்களின் மனங்களை மட்டுமல்ல… எதிர்க்கட்சித் தலைவர்களின் மனங்களையும் முதல்வர் விஜய் வென்றுவிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்