தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று மற்ற சில கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்தநிலையில் சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து. 17-வது சட்டப்பேரவை கூட்டம் நேற்று( மே 11) தொடங்கியது. இதில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், 2 -வது நாளாக சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரு கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசினர். 5 ஆண்டு காலம் முதல் அமைச்சர் விஜய் நல்லாட்சி தர வேண்டும் என்றும் தவெக அரசு தொடர எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேசினார்.

Comments are closed.