புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். 2 நாட்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 540 பக்க குற்றப் பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. இந்த வழக்கில் இன்று (மே 8) தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். இதனைக் கேட்டதும் கருணாஸ் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

Comments are closed.