தமிழக அமைச்சரவையில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கொள்முதலுக்கான டெண்டர் நடவடிக்கையில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த ஊழல் குற்றச்சாட்டில் அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பிலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிடனர். சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை, டான்ஜெட்கோ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மின்சார வாரியத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் 1987ம் ஆண்டு தொடங்கி அன்று எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கான கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன’ என்றார்.

Comments are closed.