Rock Fort Times
Online News

திண்டிவனம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல்: டிரைவர் பலி: 40 பேர் காயம்…!

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி 40 -க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று இன்று (ஏப்.28) அதிகாலை சென்று
கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே சலவதி பகுதியில் அந்தப் பேருந்து சென்றபோது திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பேருந்து வருவதை கவனிக்காமல் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது லாரி மோதியதில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 40 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டு, திண்டிவனம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ.க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்