கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கருப்பூர் சாலப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் 79 வயதான மூதாட்டி தாயாரம்மாள். இவரது கணவர் பெருமாள், மகன் ராஜகோபாலன். இவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் வீட்டில் தனியாக மூதாட்டி தாயாரம்மாள் வசித்து வந்தார். மூதாட்டியின் மகள் மனோரஞ்சிதம், திண்டுக்கல் அருகே உள்ள லந்தகோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது குழந்தைகளுடன் வந்து தாயை பார்த்து விட்டு செல்வாராம். இந்தநிலையில் இன்று( ஏப்.27) நீண்ட நேரம் ஆகியும் தாயாரம்மாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருகில் வசித்து வரும் ஜெயசித்ரா, மூதாட்டியின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வெள்ளியணை காவல் துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், மூதாட்டி அணிந்திருந்த தங்கத்தோடு மற்றும் தங்க மூக்குத்தி ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஆகவே, தங்க நகைக்கு ஆசைப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. மூதாட்டியை கொலை செய்த மர்ம நபரை போலீசார்
வலைவீசி தேடி வருகின்றனர். தனியாக வசித்து வரும் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.