தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளது. மசோதாவின் மீது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உரையாற்றிய நிலையில், மசோதா மீது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் இன்று( ஏப்.17) உரையாற்றினார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா உண்மையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்படி இல்லை. 2023-ல் கொண்டு வரப்பட்ட அதே இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டு வந்துவிட்டு அதனை நிறைவேற்ற நாங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோருகிறது. தமக்கான செல்வாக்கு குறைந்து வருவதை கண்டு பயம் கொண்டுள்ள பாஜக, மத்திய ஆட்சியில் தமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த மசோதாவை சட்டமாக்க முயற்சிக்கிறது. நாட்டில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்தை தடுப்பதை இந்த மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. மத்தியில் தாங்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் நோக்கில் தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறைக்கும்படி மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. மத்திய அரசின் இந்த செயல்பாடு தேசவிரோத நடவடிக்கை. நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க
மாட்டோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றும் மத்திய அரசின் முயற்சியை முறியடிப்போம் என்று ஆவேசமாக பேசினார்.

Comments are closed.