தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய நண்பரும், ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கர் ஆனந்த் என்பவரின் இரு அலுவலகங்கள், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (17.04.2026) காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியின் மற்ற இரு நண்பர்களுக்குச் சொந்தமான உணவகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் நண்பர்களின் வீடு, அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு சொந்தமான, அவர் பங்குதாரராக உள்ள ஏற்றுமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றதும், அதனைத் தொடர்ந்து கிரானைட் நிறுவனத்திலும் மூன்று நாட்கள் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.