Rock Fort Times
Online News

அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன என்ற புகார்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் முக்கிய அரசியல் தொடர்புடைய நபர்களின் இடங்களிலும் இன்று(ஏப்.13) சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சரும் துறைமுகம் தொகுதி வேட்பாளருமான சேகர்பாபுவின் மகன்கள் நடத்தும் தனியார் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து சென்னையில் மொத்தம் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவின் மகன்கள் விக்னேஷ் மற்றும் ஜெயசிம்மன் ஆகியோர் மயிலாப்பூரில் சிவசாமி சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று(திங்கள்கிழமை) காலை சுமார் 10 மணியளவில் திடீரென அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், அவர்கள் சிஎம்டிஏ தொடர்பான அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், திருச்செந்தூர் கோவில் நிர்வாகியாக இருந்த ஒருவரின் வீட்டிலும், சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் நடத்தி வரும் அருள்முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தொழிலதிபர் பிரேம்குமார் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் அரசு ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனுடன் அடையார், வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தேர்தல் ஆணையம் பல்வேறு சோதனைகளில் ரூ.120 கோடி ரொக்கம், ரூ.2 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.295 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.227 கோடி மதிப்பிலான இலவச பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்