Rock Fort Times
Online News

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி வரும் 21, 22 மற்றும் 23 என மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், வாக்குப்பதிவு சுதந்திரமாக நடைபெற ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும், படிவம் 12டி பயன்படுத்தி தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் 1.5 லட்சம் பேர் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளனர். மொத்தமாக 3.40 லட்சம் பேர் தபால் ஓட்டுக்கு தகுதி உள்ளவர்கள். 85 வயது மேற்பட்டவர்கள் 1.2 லட்சம் பேர். மாற்றுத்திறனாளிகள் 70,000 என 1.9 லட்சம் பேர் தபால் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் களத்தில் உள்ளார். வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கைப்பேசி எண்ணில் இருந்து 1950-க்கு EPIC எண்ணை பதிவு செய்து குறுஞ்செய்தி அனுப்பினால், வாக்காளர் என்பது உறுதிப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் 20,757 பேரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. இதில் 3,000 தவிர்த்து மற்ற அனைத்து துப்பாக்கிகளும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் 75,032 வாக்கு சாவடிகள் இருந்த நிலையில், தற்போது வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75,064 உயர்ந்து உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 5,938 கண்டறியப்பட்டுள்ளன. இந்த முறை 140 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், 89 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பெரம்பூர், கொளத்தூர், ஆர்.கே.நகர் ஆகிய 3 தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கரூரில் மட்டும் அதிகபட்சமாக 5 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.40 லட்சம் காவல் துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்காவல் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 3.40 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். சி-விஜில் செயலி மூலம் தேர்தல் தொடர்பாக 3,791 புகார்கள் பெறப்பட்டு, அதில் 727 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலையொட்டி வரும் 21, 22 மற்றும் 23 என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது. தேர்தல் பணிக்காக 1,032 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 727 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக பணம், நகைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்பித்தவர்களிடம் ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை பணமாக 126 கோடி ரூபாயும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், 295 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 227 கோடி இலவச பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார். மேலும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசு செய்தித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வாகனங்களில் சென்று செய்தி அனுப்புவதாக வந்த புகார் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு உத்திகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்