Rock Fort Times
Online News

திருச்சியில் தேர்தல் பணிகள் தீவிரம்: த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேட்டி..!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் தலைவர் விஜய் போட்டியிட உள்ள நிலையில், அங்கு கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திருச்சி, தஞ்சை மார்க்கெட் சாலையில் உள்ள கிழக்கு தொகுதி அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று(ஏப்.13) நடைபெற்றது. இதில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, டெல்டா மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்களை பொதுமக்கள் புறக்கணித்து வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தலைவர்களும் தங்கள் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாக குற்றம்சாட்டினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரம் “குடும்ப அலை” ஆக மாறியுள்ளது என்றும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மக்கள் ஆதரவு கிடைத்ததாகவும் கூறினார். மேலும், ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்கள் நலனுக்கான அரசியல் தான் முக்கியம் என்றும், தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் விஜய் பிரச்சாரம் செய்ய வருவார் எனவும், மக்கள் சந்திப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெற்றி பெற்ற பின் எம்எல்ஏ அலுவலகம், மக்கள் குறை தீர்க்கும் மையமாக செயல்படும் எனவும், விரைவில் முழுமையான தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் எனவும் கூறினார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், தமிழகத்தில் வடநாட்டு அரசியல் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து வருவதாகவும், ஜனநாயகத்திற்கேற்ற மாற்ற அரசியல் தேவையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்