Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள ஒரு கடையில் ஆபத்தான முறையில் கரும்புச்சாறு பிழியும் சிறுவர்கள்…! * குழந்தை தொழிலாளர் தடுப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? (வீடியோ இணைப்பு)

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் தாகம் தணிக்க தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு போன்றவற்றை வாங்கி சாப்பிட்டும், இளநீர், குளிர்பானங்கள் பழச்சாறு, கரும்புச்சாறு போன்றவற்றை வாங்கி அருந்தி தாகம் தணித்து வருகின்றனர். வெயில் காரணமாக ஆங்காங்கே சாலையோரங்களில் தற்காலிக கடைகளும் புற்றீசல் போல பெருகி வியாபாரம் ‘ படு ஜோராக’ நடைபெற்று வருகிறது. இதில், வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சிறுவர், சிறுமிகளையும் சில கடைகளில் நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு கடையில் இயந்திரம் மூலம் இரு சிறுவர்கள் கரும்புச்சாறு பிழிந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு ஆபத்தான தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்டமாகும். அவ்வாறு பணியமர்த்துவது குற்றமும் ஆகும். மீறுவோருக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. பள்ளி நேரத்தை தவிர குடும்பத் தொழிலில் சிறுவர்கள் ஈடுபடலாம் என்றாலும் இது போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்துவது எந்தவகையில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சிறுவர்கள் ‘கை’ திடீரென இயந்திரத்தில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது? அவர்களின் கல்வி என்னாவது? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே, இது போன்ற ஆபத்தான தொழிலில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், குழந்தை தொழிலாளர் தடுப்புத்துறை அதிகாரிகளும் கடைகளில் ஆய்வு செய்து இதுபோன்ற தொழிலில் ஈடுபடும் சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்