திருச்சி மேற்குத் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்: வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டிய அமைச்சர் கே.என். நேரு..!
திருச்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட கோரிமேடு புது தெரு, புத்தடி மாரியம்மன் கோயில் தெரு, ஒண்டி கருப்பண்ணசாமி கோயில், சின்ன மிளகுபாறை ராஜா காலனி மற்றும் எஸ்பிஐ காலனி பகுதிகளில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு, தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மிளகுபாறை பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, அந்த பகுதி பெண்களுடன் கலந்துரையாடிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகளுக்கான வாக்குறுதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடந்த தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வலிமையை பிரதிபலிப்பதாக அமைந்தது.

Comments are closed.