சாத்தான்குளத்தில் தந்தை-மகனை கொடூரமாக தாக்கி கொலை செய்த இன்ஸ்பெக்டர் உட்பட 9 போலீசாருக்கு மரண தண்டனை…* மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை நடத்தியதாக இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையின் போது காவல்துறையினர் இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், இருவரின் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். போலீசார் தாக்கியதில் பலத்த காயமடைந்த இருவரும் ஜூன் மாதம் 23ம் தேதி சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்துறை விசாரணையில் தந்தை-மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா. செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார். மாநில காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 2,500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முத்துக்குமரன் இன்று (ஏப்ரல் 6) அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில், இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை- மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது. இது அரிதினும் அரிதான வழக்கு. கைது செய்யப்பட்ட போலீசாரால் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு காட்ட இயலாது. வெறும் ஆயுள் தண்டனை வழங்கினால் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் இருக்காது. என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.