தமிழகத்துக்கு வருகிற 23ம் தேதியும், புதுச்சேரிக்கு வருகிற 9ம் தேதியும், சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று(04-04-2026) புதுச்சேரிக்கு வருகை தந்து திறந்த வாகனத்தில் நின்றபடி ‘ரோடு ஷோ’ மூலம் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். புதுச்சேரி மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வழிநெடுகிலும் சாலையோரங்களில் நின்று விஜய்க்கு மலர் தூவி வரவேற்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் விஜய் பேசியதாவது:-
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தை வைத்து அரசியல் செய்தார்கள். களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களையே புதுச்சேரியில் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். இரு கூட்டணிகளும் சிறுபான்மையினருக்கு எதுவும் செய்யாது. ஏமாற்று கூட்டணிகளுக்கும், ஓட்டை உடைசல் கூட்டணிகளுக்கும் ஓட்டு போடாதீர்கள். சுஷ்மா ஸ்வராஜ் 20 ஆண்டுகளுக்கு முன்பே புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாநில அந்தஸ்து தொடர்பான அறிக்கை அளித்தும் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகள் அந்தஸ்து பெறாதது ஏன்? காங்கிரஸ், பாஜக கூட்டணி என தேசிய கட்சிகள் ஆட்சி செய்திருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. ஆகவே, தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுப்போம். மகப்பேறு உதவித்தொகை ரூ.25,000 வழங்கப்படும். காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.

Comments are closed.