சாத்தான்குளத்தில் தந்தை- மகன் அடித்துக் கொலை: 9 போலீசாருக்கு தண்டனை விவரம் இன்று (ஏப்.2) அறிவிப்பு…!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன்19ம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்து குமரன் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் அடித்ததால் தான் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது” என்று கூறி தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (02.04.2026) வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.