எதிரணியின் சூழ்ச்சிகளை முறியடித்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தே தீருவேன்!* மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் சீ.கதிரவன் சூளுரை!
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் அதிகார யுத்தத்தாலும், அனல் பறக்கும் பிரச்சாரத்தாலும் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் குறிப்பாக திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளரான கதிரவனுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக பேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் வெளியாகும் வீடியோக்களால் மண்ணச்சநல்லூர் பகுதியே சூடாகியுள்ளது. இதைமறுக்கும் திமுக வேட்பாளர் கதிரவன் தரப்போ, கல்லூரி மாணவர்களை பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபடுத்தவே இல்லை. இது அதிமுகவினரின் அப்பட்டமான பொய் என சூடத்தில் சத்தியம் செய்யாத குறையாய் அடித்து சொல்கிறார். இந்நிலையில் இதன் பின்னணி குறித்து விசாரித்தோம்., “திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான மண்ணச்சநல்லூரில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சீ.கதிரவனே மீண்டும் களம் காண்கிறார். நேற்றைய தினமான மார்ச் 30 அன்று 10 ஆயிரம் பேரைத் திரட்டி மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று ( மார்ச் -31) முசிறி ஒன்றியத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகளையும் வி.ஐ.பிக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வந்துள்ளார். அதே சமயத்தில் தொகுதிக்குட்பட்ட திருவெள்ளறை, பெரமங்கலம் போன்ற 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதாகவும், அவர்களை வைத்து பணப்பட்டுவாடா செய்வதாகவும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர். இதனால் சோசியல் மீடியாவும் மண்ணச்சநல்லூர் தேர்தல் களமும் தகியாய் தகிக்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளரான கதிரவனின் ஆதரவாளர்களிடமும் கட்சியினரிடமும் பேசினோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது., மண்ணச்சநல்லூரில் திமுக சார்பில் போட்டியிடும் கதிரவனின் வெற்றி இப்போதே உறுதியாகியுள்ளது. அதற்கு தன்னார்வமாக நேற்றையதினம் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமே சாட்சி. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிரணியை சேர்ந்தவர்கள் எங்கள் மீது பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது மக்களிடம் எடுபடாது. இன்று தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் யாரும் மாணவர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் கதிரவனின் ஆதரவாளர்கள். மேலும், ஓட்டுப்பதிவு நடக்கும் 48 மணி நேரத்திற்கு முன்புவரை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். இதுதான் ஜனநாயகம். இதையெல்லாம் விடுத்து எதிரணியை சேர்ந்தவர்கள் எவ்வளவு முட்டி மோதினாலும் அவர்களால் தேர்தலில் ஜெயிக்க முடியாது. இதுகுறித்து எம்.எல்.ஏ கவனத்திற்கும் கொண்டு சென்றோம். அதற்கு அவர் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு நாம் செய்த நலத்திட்டங்களை கொண்டு சேருங்கள். எக்காரணத்திலும் கட்சிக்காரர்கள் விசயத்தில் காம்பர்மைஸ் ஆகமாட்டேன். நிச்சயம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம்.” என்று கூறியுள்ளார் என்றனர். தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த முதல் நாளே மாறி மாறி முட்டிக்கொள்ளும் கட்டாகுஸ்தி போர்களால் இப்போதே மண்ணச்சநல்லூர் ரணகளமாக தொடங்கியுள்ளது என்பதே உண்மை.

Comments are closed.