Rock Fort Times
Online News

பெண்கள் குறித்து திமுக ஆதரவாளர் பொன்ராஜ் தரம் தாழ்ந்த பேச்சு – அதிமுக, த.வெ.க. கடும் கண்டனம்..!

தமிழகப் பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக ஆதரவாளரான பொன்ராஜுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகப் பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ். திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தி உள்ளார் பொன்ராஜ். பெண்களுக்கு எதனால் 5 ஆண்டு திமுக ஆட்சியில் பாதுகாப்பு பாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இப்படிப்பட்ட ஆபாச பேச்சுகளே பதில். ஐயா அப்துல் கலாமின் உதவியாளர் என தன்னை அடையாளப்படுத்தும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமாம் ஐயா கலாமின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது. கடந்த 5 ஆண்டுகளாக தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்ட நபர்கள் என்பதை தமிழகப் பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி.சேகர், பொன்ராஜில் துவங்கி இணையத்தில் போலி பெயருடன் திரியும் பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும். மகளிர் வாழ வேண்டும் என்றால், திமுக வீழவேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க.கண்டனம்:

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில், நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும். தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது? இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுக-வுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? கண்ணியத்திற்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்