ரம்ஜான் பண்டிகை: திருச்சியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை…* ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்!
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை 30 நாட்கள் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர். தமிழகத்தில் பிறை தென்படாத நிலையில் இன்று(மார்ச்21) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜியினால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திருச்சி, பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசல் திடலில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், மாநிலத் தலைவர் பீமநகர் ரஃபீக் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் ஈரானில் நடைபெற்று வரும் போர் அச்சம் நீங்கி மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றும், சகோதரத்துவம் தலைத்தோங்க வேண்டும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு நல்லெண்ணங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் துவா செய்தனர். இதேபோன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமையிலும், சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பிலும் மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Comments are closed.