திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நாமக்கல் பகுதியை சேர்ந்த கௌசிக் என்பவர் தனது தாயாருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற கார் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் கௌசிக் ஓட்டிச்சென்ற கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி கறிக்கடைக்குள் புகுந்துள்ளது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டிருந்த சின்னபள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (40), ரமேஷ், ஸ்ரீ ராமசமுத்திரம் பகுதியை சேர்ந்த கொடியரசு (45), வடிவேல் மற்றும் காரில் இருந்த கௌசிக் (35), அவரது தாயார் ஈஸ்வரி (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனை கண்டதும் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் மற்றும் நாமக்கல் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் சுபாஷ் பலத்த காயமடைந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கொடியரசு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.