பிரபல நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறது. இதற்காக அவர் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இதனை, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விஜயை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ வருகிற 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதற்காக இன்று (மார்ச் 14) தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் விஜய், இரவு தனியார் நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளிக்க உள்ளார். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இதற்காக விஜய் உடன் பேசி வருவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று திடீரென மாவட்ட செயலாளர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளார். இதில் முக்கியமாக, கூட்டணி வைக்கலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானோர் தலைவர் (விஜய்) எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என தெரிவித்த நிலையில், ஒரு சிலர் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுகவை எதிர்த்து களமாட சரியாக இருக்கும் என்ற தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான், சிபிஐ சம்மன், பவன் கல்யாண் தரப்பு பேச்சுவார்த்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, கடந்த சில தினங்களாகவே தவெக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி் வருகின்றன. தவெகவை எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக தலைவர் விஜயின் டெல்லி பயணத்தின்போது இன்று இரவு அவரை பாஜக தரப்பில் இருந்து கூட்டணி தொடர்பாக அணுகலாம் என்றும் அதற்கான அழுத்தம் தரப்படலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விஜயின் டெல்லி பயணம் தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.

Comments are closed.