சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்துறை செயலர் தீரஜ் குமார் கூறுகையில், குற்றங்கள் எதுவாகினும் பொதுமக்கள் உடனே புகார் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், பாலியல் வன்முறையில் தைரியமாக வந்து பெண்கள் புகார் அளிக்கின்றனர். கஸ்டடி மரணங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. போக்சோ வழக்குகளில் தைரியமாக புகார் அளிப்பதால் தான் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. அதிக வழக்குகள் பதிவாவதால் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது என்று கருதக்கூடாது. மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் உண்மை என்ன என்பது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கிறது. பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. 2021ம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025ம் ஆண்டு அது 401 வழக்குகளாக குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக சில செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம். 2021ல் 1597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன; 2025ல் இது 1461 ஆக குறைந்துள்ளது. அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன, மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அனைவரும் அறிவார்கள். சிபிசிஐடி அவ்வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வெளிப்படைத்தன்மை காரணமாக வழக்கை சிபிஐக்கு மாற்றியது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்புகள் பெறப்படுகின்றன.

இதனை தொடர்ந்தும் டிஜிபி வெங்கட்ராமன் கூறுகையில், தைரியமாக புகாரளிக்க பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பவர்கள் துணிந்து புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறிய குற்றங்களும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகின்றன என்றார்.

Comments are closed.