Rock Fort Times
Online News

“தமிழக வளர்ச்சிக்காக அல்லும், பகலும் அயராது பாடுபடுகிறோம்”… * திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி..!

வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இதற்காக மத்திய அரசு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது” என்று திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். திருச்சி, பஞ்சப்பூரில் நடைபெற்ற என்.டி.ஏ.பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களோடு தொடர்புடையது இந்த நிகழ்ச்சி. இந்த திட்டங்கள், தூய்மையான எரிசக்தி, பெட்ரோல் தயாரிப்பு, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பானவை. இந்த திட்டங்கள் எரிசக்தியின் அணுகலை அதிகரிப்பதோடு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை அளிக்கவல்லது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு கட்டமைப்புக்கு அடிக்கல் நாட்டுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.3,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் மூலம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கும் குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு சேர்க்கப்பட இருக்கிறது. வீடுகளுக்கே குழாய் வழியில் எரிவாயு கொண்டு செல்லப்படுவதால், இது மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும். இதன்மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். இயற்கை எரிவாயு என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. 8 ஆண்டுகளில், 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையான சுற்றுச்சூழல் நன்மைகளை அளிக்க வல்லது இந்த திட்டம் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

மசகு எண்ணெய் கலவை ஆலை

சென்னையில் உள்ள மசகு எண்ணெய் கலவை ஆலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை தமிழ்நாடு மற்றும் பிற மாநில தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றும். இந்த ஆலை காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதி பெருமளவில் குறையும். இது நாட்டுக்கு மிகப் பெரிய சேமிப்பை வழங்கும். இன்று நான், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை தொடங்கி வைத்துள்ளேன். இந்த பணிகள் அனைத்தும், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த நெடுஞ்சாலை, ஆலயத்துக்கு வெகு அருகில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். கோயிலுக்கு வரும் வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் புறவழிச் சாலையில் திருப்பி விடப்படும். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க மேம்பட்ட தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் மேன்மைக்கு நாங்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்து பாடுபட்டு வருவோம்’’. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த பொதுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்