தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்த போது, ‘Dmk Files’ என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரப் பட்டியலை, கடந்த 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். அதில், திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர் பாலு, அவரின் மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மொத்தம் 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். இந்த குறுக்கு விசாரணையின் போது அண்ணாமலை, அவரது மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும், ஊழல் முறைகேடு குற்றச்சாட்டால் தான் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது உண்மைதானா? என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி இருந்தார். இதுதொடர்பாக தவறான தகவல்களை அளித்து, உள்நோக்குடன் கேள்வி எழுப்பிய டி.ஆர். பாலு மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவுக்கு எதிராக அண்ணாமலை புதிய மனு ஒன்றை இன்று (மார்ச் 10) நேரில் வந்து தாக்கல் செய்துள்ளார். அதில், ‘டி.ஆர் பாலு நீதிமன்றத்தில் தெரிவித்த விவரங்கள் உண்மைக்கு மாறானவை, அவர் தெரிவித்த விவரங்கள் தனக்கும், தன்னுடைய மனைவியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் டி.ஆர் பாலு மீது அவதூறு வழக்கின் கீழ், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அப்படி எதுவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். டீயும், காப்பியும் ஒன்றாக கலக்காது என்று தெரிவித்தார். இதன்மூலம் தமிழக வெற்றிக்கழகமும், பாஜகவும் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

Comments are closed.