Rock Fort Times
Online News

திருச்சியில் இன்று(மார்ச் 9) திமுக மாநில மாநாடு: தேர்தல் வாக்குறுதிகள் வெளியாக வாய்ப்பு…!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். தொண்டர்கள் எவ்வித சிரமமும் இன்றி மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக பிரம்மாண்ட எல்இடி டிவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக 700 அடுப்புகள் அமைக்கப்பட்டு, சுமார் 1,100 தன்னார்வலர்கள் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 20 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த இடம் தயாா் படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டின் முகப்பு பகுதியில் 110 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கழக கொடியேற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 500 மீட்டர் நீளம் “ராம்ப் வாக்” பாதையில் முதல்வர் நடந்த சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார். மாலை 5 மணி அளவில் மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை திமுக சந்திக்கும் முன் இதே இடத்தில் மாநாட்டை நடத்தி தேர்தல் முக்கிய வாக்குறுதிகளை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. அதேபோல இந்த மாநாடும் வெற்றி மாநாடாக அமையும் என்று திமுக நிர்வாகிகள் திடமாக நம்புகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்