திமுக கூட்டணியின் முக்கிய தோழமை கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கடந்த 40 நாட்களாக கூட்டணி விஷயத்தில் திமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தது. குறிப்பாக அக்கட்சியின் மாணிக்கம் தாகூர் எம்.பி போன்றோர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தினந்தோறும் ஏதேனும் ஒருவடிவில் எழுப்பி வந்தனர். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தமிழகத்தில் நடைமுறைக்கு உதவாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் அழுத்தம் கொடுத்தது. ஆனால் திமுகவோ இந்த முறை தேமுதிக மற்றும் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளதால் அவர்களுக்கும் சீட்டு ஒதுக்க வேண்டும் என கூறிவந்தது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதில் இருதரப்புக்கும் இணக்கமான தொகுதிகள் முடிவானதாக கூறப்பட்டது. நாளை இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என நேற்று இரு தரப்பும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று( மார்ச் 4) மாலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் தருவதாக திமுக தலைமை தெரிவித்த நிலையில், அதை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Comments are closed.