Rock Fort Times
Online News

மாநிலங்களவைத் தேர்தல் : திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு!

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும். இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு இடத்தை வழங்கிய நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, பேராசிரியர்.ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்